சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு என்ன நட‌ந்த‌து?

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் நிலவும் மர்ம‌ங்கள், கேள்விகள் விசாரணையின் போக்கு பிரபலங்களின் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்..
சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு என்ன நட‌ந்த‌து?
x
முல்லை இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி செய்தியுடன் தான்,  சீரியல் பிரியர்களுக்கு 9 ஆம் தேதி காலை விடிந்த‌து...  

சின்னத்திரை சீரியலில் 'முல்லை' என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய நடிகை சித்ராவை காணவே ரசிகர் கூட்டம் இருந்த‌து. 

இது தவிர, இன்ஸ்டாகிராமில் அவருக்கு 16 லட்சம் பாலோவர்ஸ்... புகைப்படத்தை பதிவிட்ட அடுத்த கணமே லைக்ஸ், ஷேர் பறக்கும்... அத்தனை பிரபலமாய் இருந்த சித்ரா, நட்சத்திர ஓட்டல் குளியலறையில் 9ம் தேதி காலை பிணமாக கிடந்துள்ளார். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவர், சித்ராவின் கணவரும், தொழிலதிபருமான ஹேம்நாத்... 

படபிடிப்பு முடிந்து அறைக்கு வந்தவர், குளித்து விட்டு வருவதாக கூறி தன்னை வெளியே இருக்க சொன்னதாகவும், நீண்ட நேரமாகியும் கதவை திறக்காத‌தால், ஓட்டல் ஊழியர் உதவியுடன் மாற்று சாவி வைத்து திறந்த போது, பிணமாக தொங்கினார் சித்ரா எனவும் போலீசார் விசாரணையில் கூறினார், ஹேம்நாத்... 

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் சின்னத்திரை பிரபலங்கள் தெரிவித்த கருத்துகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. 

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முடிவில் அவசரப்பட வேண்டாம், தவறான முடிவு எடுத்து விடாதே என அறிவுரை கூறி இருந்தேன் என்கிறார், நடிகை ஷாலு ஷம்மு... 

இதே போல, சித்ராவின் கணவர்  ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை கூறுகிறார், நடிகை ரேகா நாயர்...

மனைவி குளிக்க வேண்டும் என கூறி, கணவரை அறையில் இருந்து வெளியே அனுப்புவாரா? சித்ராவின் முகத்தில் நக கீறல்கள் ஏற்பட்டது எப்படி?  நள்ளிரவு வரை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த சித்ரா திடீரென மரணம் அடைந்த‌து எப்படி? 
இப்படி அடுத்தடுத்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவற்றிற்கு விடைகாண்பதற்காக  ஹேம்நாத்திடம் விசாரணையை தொடருகின்றனர், போலீசார், 

தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தபோது, சித்ராவின் செல்போன் தவிர வேறு தடயம் ஏதும் கிடைக்கவில்லை என்பதே முதல்கட்ட தகவல். கடைசியாக அவர் நடித்த படப்பிடிப்பு தளத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவருடன் நடித்த நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது. 

சித்ராவை நிச்சயதார்த்தம் செய்து, பெற்றோர் சம்ம‌த‌த்துடன் பதிவு திருமணம் செய்தவர் ஹேம்நாத்.

இதனால், ஆர்.டி.ஓ லாவண்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து சித்ராவின் உடலில் இருந்த காயங்களை குறித்து கொண்டு விசாரணையை துவக்கி உள்ளார். அவரிடம் கேட்டபோது, பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே சித்ரா மரணத்தின் மர்ம‌ம் விலகும் என்று தெரிவித்தார். 

இது ஒருபுறம் இருக்க, சித்ராவின் உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த நடிகர், நடிகைகள் கதறி அழுதபடி சென்றனர். குறிப்பாக நடிகர் மனோபாலா, சின்னத்திரை நடிகர்கள், வேலைப்பளுவை குறைத்து கொள்ளுங்கள் என கண்ணீருடன் அறிவுரை கூறினார். 

ஒவ்வொரு முறையும், தற்கொலை என்ற பெயரில் நடக்கும் கலைத் துறை பிரபலங்களின் மரணங்கள் ஒட்டுமொத்த திரையுலகை அதிர வைக்கின்றன. சில தினங்களில் அவை கடந்து போகின்றன... நடிகை சித்ராவின் மரணத்திலாவது மர்ம‌ம் விலகுமா...என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்