ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி காலமானார்

பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி காலமானார். அவருக்கு வயது 90. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி காலமானார்
x
ஹாலிவுட்டில் பிரபலமான 007 எனும் துப்பறியும் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஷான் கானெரி. ஸ்காட்லாந்தில் கடந்த 1930ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த இவர், மேடை நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றி, ரசிகர்களின் பேராதரவை பெற்றார். ஜேம்ஸ் பாண்ட் 007 - படங்களின் முன்னோடி இவரே.

தனது திரை வாழ்வில் கடந்த 1962 முதல் 1983ம் ஆண்டு காலகட்டத்தில் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். தான் நடித்த துப்பறியும் கதை படங்களுக்காக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும்  கொண்ட நடிகர் ஷான் கானரி. இப்போதும் இவர் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு மவுசு அதிகம்.தனது நடிப்புக்காக ஆஸ்கர் விருது, 2 முறை பிரிட்டானிய அகாடமி விருது மற்றும் 3 முறை கோல்டன் குளோப் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். 

ஷான் கானரியின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் போராட்ட களங்கள் பல கடந்து செல்கின்றன. இவரது தந்தை ஜோசப் கானரி தொழிற்சாலையில் ஊழியராகவும், தாய் யுபேமியா ஒரு துப்புரவுத் தொழிலாளியாகவும் இருந்துள்ளனர்.இவரது மூதாதையர்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் இருந்து ஸ்காட்லாந்துக்கு இடம்பெயர்ந்தனர். ஆரம்ப பள்ளியில் பயிலும் போது உயரம் குறைந்து காணப்பட்ட ஷான் கானரி, அவரது 18வது வயதில் 6 அடி 2 அங்குலம் உயரத்தை எட்டினார்.

கடந்த 1989ம் ஆண்டில் பீப்பிள் எனும் அமெரிக்க இதழ் சிறந்த ஆணழகனாக இவரைத் தேர்வு செய்தது. 1999ல் நடத்தப்பட்ட  வாக்கெடுப்பில் நூற்றாண்டின் சிறந்த ஆணழகனாக ஷான் கானரி தேர்வானார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய ஜேம்ஸ் பாண்ட், உயிரிழந்தது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்