உள்ளாட்சி தேர்தல் பணி எப்போது தொடங்கும்? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது இரண்டரை ஆண்டு காலமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இதுவரை ஏன் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரை செய்யும் பணி, மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்ததால்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி தலைமையிலானஅமர்வு, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகள் எப்பொழுது தொடங்கும் என்பதை 2 வார காலத்திற்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது.
