மதுரைக்கு கிடைத்த மற்றொரு அடையாளம்.. "அண்ணாவை" விஞ்சிய "தம்பியின்" பிரமாண்டம் - ஒரு சின்ன விசிட்..!

x

முச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மண்ணான மதுரையில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தூங்காநகரமான மதுரையில் திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சராக கருணாநிதி இருந்த பொழுது சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரமாண்டமான அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டிருந்தது....

அதேபோலவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட நூலகமாக.. மற்றொரு அடையாளமாக திகழ இருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

இந்த நூலகம் மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் 114 கோடி மதிப்பில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆறு தளங்கள் கொண்டு கட்டப்பட்டு இருப்பதால் லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தின் அடித்தளம் சுமார் 1795 சதுர மீட்டர் பரப்பளவில் 200 இருசக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக கட்டப்பட்டுள்ளது.

நாளிதழ் சேமிப்பு இடம்... நூல் கட்டும் இடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.

தரைதளத்தில் அழகிய கலைக்கூடம்... மாற்றுத்திறனாளி களின் வசதிக்கு ஏற்றவாறு அவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கை வசதிகள்... கூட்ட அரங்கம்... முக்கிய பிரமுகர்களின் அறை... சொந்த நூல்களை எடுத்து வந்து படிக்கும் பிரிவு... பல்வகை பயன்பாடு அரங்கம்... உறுப்பினர்கள் சேர்க்கை பிரிவு... தபால் பிரிவு... மின் கட்டுப்பாட்டு அறை.... போன்றவை இடம் பெற்றுள்ளன.

முதல் தளத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூல்கள் பிரிவு.... குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்... குழந்தைகளுக்கான நூலகப்பிரிவு... பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு... அறிவியல் உபகரணங்கள் பிரிவு... சொந்த நூல்கள் படிக்கும் இரண்டாவது பிரிவு போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் தளம் முழுவதும் தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன.

மூன்றாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளன.

நான்காவது தளத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன் தரும் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்கக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐந்தாம் தளத்தில் அடியில் மின் நூலகம், பல்லூடக பிரிவு நூல் பாதுகாப்பு பிரிவு, ஒளிப்பதிவு கூடம்... படத்தொகுப்பு பிரிவு போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு , நிர்வாகப் பிரிவு, பணியாளர்கள் உணவு அருந்தும் இடம்... என அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த நூலகத்தில் குடிநீர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிவறை வசதி, இணையதள வசதியை பெற இலவச வைபை போன்றவையும் செய்யப்பட்டுள்ளன.

மொத்தத்தில் கோயில் நகரான மதுரையில் மற்றொரு அடையாளமாக நின்று கம்பீரமாக காட்சியளிக்கிறது, கலைஞர் நூற்றாண்டு நூலகம்.


Next Story

மேலும் செய்திகள்