மதுரையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், கடந்த 2019-ல் காவல்துறை மீது வழக்கு ஒன்று தொடுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கிருஷ்ணகுமார் கஞ்சா கடத்தியதாக கூறி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கிருஷ்ணகுமார் வழக்கு தொடர்ந்த நிலையில், எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் துணை ஆய்வாளர் பேரரசி உள்ளிட்டோரை விசாரணை நடத்தி.. விசாரணை அறிக்கையை சமர்பிக்கமாறு தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராக்காவுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். விசாரணையில், காவலர்கள் இருவரும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்குபதிவு செய்திருந்தது அம்பலமான நிலையில், விசாரணை அறிக்கையும் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என கூறியிருந்தும், அங்கு தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை அதிகாரி இந்த வழக்கில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என வேதனை தெரிவித்தார். மேலும், காவலர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முன்விரோதம் காரணமாக மனுதாரர் மீது வழக்குபதிவு செய்திருப்பதாகவும் கூறிய அவர், மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் வழக்கை முடித்து வைத்தார்.