ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்க, இன்னொரு நபருக்கு அதிகாரம் அளிக்கும் முறை பவர் பத்திரப்பதிவு முறை எனப்படுகிறது. இதன்படி, முதல் நபர் என்றழைக்கப்படும் சொத்தின் உரிமையாளர், முகவர் என்று அழைக்கப்படும் இன்னொரு நபருக்கு தனது சொத்தை விற்பதற்கான உரிமையை தரலாம்.
அந்த முகவர் பத்திரப் பதிவு செய்யும் போது, தனக்கு உரிமை அளித்தவர், "உயிருடன் உள்ளார்" என்ற ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும். பத்திரப் பதிவுக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும் முப்பது நாளுக்கு முன்னர், இந்த ஆவணமும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என 2013-ல், பத்திரப் பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், முதல் நபர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, பத்திரப் பதிவு செய்யும் தேதியன்று பெற்று வழங்க வேண்டும் என பதிவு அலுவலர்கள்
சொல்வதாகவும், இதனால் சிரமம் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இந்நிலையில், அதற்குறிய விளக்கத்தை பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது. பத்திரப் பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முன் 30 நாட்களுக்குள் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு முன்பாக சான்றிதழ் பெறப்பட்டிருந்தால், அது செல்லாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.