தமிழ்நாடு

சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்​பு...

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னையில் 5 இடங்களில் கரைக்கப்பட்டன.

தந்தி டிவி

சென்னையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள், எண்ணூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை கடல் பகுதியில் ராட்சத கிரேன்கள் உதவியுடன் கரைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ஆயிரத்து 320 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளால் ஊர்வலமும், சிலை கரைப்பும் அமைதியாக நடந்து முடிந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் - ஊர்வலத்தில் இஸ்லாமியர்களும் பங்கேற்பு

சென்னையில், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 விநாயகர் சிலைகளை, இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர். நேதாஜி நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதாலும், மசூதிகள் அமைந்துள்ளதாலும் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் பலர் விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல முயற்சி - இந்து முன்னணியை சேர்ந்த 30-ம் மேற்பட்டோர் கைது

திருவல்லிக்கேணியில் உள்ள , காயிதமில்லத் சாலை வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த முயன்ற , இந்து முன்னணியினர் கைதுசெய்யப்பட்டனர். அப்போது அங்கே பரபரப்பான சூழல் நிலவியது.

மாமல்லபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில், டிராலி உதவியுடன் கரைக்கப்பட்டது.

குன்னூர்

நீலகிரி மாவட்டம் குன்னூரில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பேண்டு வாத்தியங்கள் முழங்க 101 விநாயகர் சிலைகள் லாஸ் நீர் வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன.

கொடைக்கானல்

கொடைக்கானலில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள், அரசுப்பள்ளி அருகே உள்ள ஓடையில் கரைக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 62 விநாயகர் சிலைகள் சங்குமுக கடலில் கரைக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு

திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், குரும்பூர், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருச்செந்தூர் கடலில் கரைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விநாயகர் சிலை ஊர்வலம் - அர்ஜூன் சம்பத் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் விநாயகர் சிலை ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. இதனை இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, நூற்றுக்கும் விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, மாமல்லப்புரம் கடலில் கரைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

செங்கோட்டை மோதல் - சமாதான கூட்டம்

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சமாதான கூட்டம், செங்கோட்டையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஷில்பா, சமூகவலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி