சீர்காழியில் 16 கிலோ நகைக்காக நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையன், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீர்காழியை சேர்ந்த நகை வியாபாரியான தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்குள் அதிகாலை நுழைந்த கொள்ளை கும்பல், அவரின் மனைவி ஆஷா மற்றும் மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோரை அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. இதில் தாயும், மகனும் உயிரிழந்த நிலையில் மற்ற 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே நகைகளுடன் தப்பிய அந்த கொள்ளைக் கும்பல் எருக்கூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அவர்களை பிடிக்க சென்ற போது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதனால் துரிதமாக செயல்பட்ட போலீசார் கொள்ளையர்களில் ஒருவரான மஹிபால் என்பவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ் படேல், மணிஷ் ஆகிய 2 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கர்ணராம் என்பவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கொலை, கொள்ளை, என்கவுன்ட்டர் என அடுத்தடுத்த அதிரடியால் சீர்காழி பகுதியே பரபரப்பாக காட்சி தருகிறது.