தனது காதலனின் ஆசைவார்த்தைகளை நம்பிய சிறுமி தனது வீட்டில் இருந்த 129 சவரன் நகைகளை, சிறுக சிறுகத் திருடிக் கொடுத்த சம்பவம் சென்னை மதுரவாயலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். மதுரவாயல், ஏரிக்கரை, லட்சுமி நகரைச் சேர்ந்த 51 வயதான பன்னீர்செல்வனின் அண்ணன் தமிழ்செல்வன் உயிரிழந்ததை அடுத்து, தனது அண்ணி மற்றும் அவரது 3 பெண் பிள்ளைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், பன்னீர்செல்வன் தனக்கு சொந்தமான 22 சவரன் தங்க நகைகளை அண்ணியிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அண்ணி வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளை பன்னீர்செல்வன் சரிபார்த்த போது, 22 சவரன் தங்க நகைகளுடன் 107 சவரன் என மொத்தம் 129 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்படாமல் நகை, பணம் மாயமானதால் குழப்பத்தில் இருந்த குடும்பத்தினர், போலீசாரின் தீவிர விசாரணையில் திருடியது யார் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதில், அவரது சகோதரரின் 3-வது மகள், கார்த்திக் என்பவருடன் பழகி வந்த நிலையில், அவர் கேட்டதன்பேரில் வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை சிறுக சிறுக எடுத்துக் கொடுத்தது தெரியவந்தது. நகைகளை விற்று கிடைத்த பணத்தில் செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் கார் வாங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 6 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய், செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.