ஆம்னி, அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பயணிகள் காயம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்தும், தமிழ்நாடு அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 5 பயணிகள் லேசான காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து திருவாரூர் வந்த ஆம்னி பேருந்தும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த அரசு பேருந்தும் எதிர்பாராத விதமாக மோதியதில், அரசு பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.