சாலை நடுவில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், லாரி டிரைவர் மனோஜை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து, பேனர் அச்சடித்து தந்த அச்சகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த வழக்கில் லாரி டிரைவர் மனோஜ் முதல் குற்றவாளியாகவும், அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் 2 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2 வாரங்களாக குடும்பத்துடன் தலைமறைவான உள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயகோபால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டின் முகப்பில் பள்ளிக்கரணை போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.