2026 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக வேட்பாளராக களமிறங்க அக்கட்சியின் திமுக விவசாய அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான, பழனியப்பா செந்தில் ஆயத்தமாகி வருவதாக தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மறைந்த தலைவர், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து திடீர் மாரடைப்பு காரணமாக திருமகன் ஈவெரா உயிரிழந்தார். அதற்கு பிறகு 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், மீண்டும் காங்கிரஸ் சார்பில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். பின்னர் இளங்கோவனும் மறைந்த நிலையில், அதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் விசி சந்திரக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சூழலில், ஈரோடு மண்டலம் இரண்டில், 36வது வார்டு கவுன்சிலர் திரு.பழனியப்பா செந்தில் குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் புதுமுகத்துக்கு திமுக வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பை பெற பழனியப்பா செந்தில் மும்முரம் காட்டி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிகம் வசிக்கும் சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் பழனியப்பா செந்திலுக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அந்த வாக்குகளை முழுவதும் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.