தமிழ் சினிமாவின் தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய், அதிக வசூலையும் அள்ளுவதோடு, இளைய தலைமுறை ரசிகர்களையும் தன்பால் ஈர்த்து வைத்துள்ளார். விஜய் படம் மீதான விமர்சனங்களுக்கு, அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்...
இந்த பேச்சுக்கு பிறகு, பிகில் பட நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள், நெரிசலில் சிக்கியதால், அவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். அந்த விழாவில், விஜய் பேசியவை அரசியலாக வெடித்தது.
இதைத் தொடர்ந்து வெளியான பிகில் படம், சமூக ஊடகத்தில் சின்னாபின்னமானது. எனினும், முந்தைய மெர்சல் உள்ளிட்ட படங்களைவிட இது குறைவுதான். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும், மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஆனால், அது 'சைலன்ஸ்டு' என்ற கொரியன் படத்தின் தழுவல் என பரபரத்து கிடக்கிறது இணைய வெளி. கதைப்படி, மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் வேலைக்கு சேரும் நாயகனை பார்த்ததும், மாணவ-மாணவிகள் பயந்து ஓடுவர்.
நாயகனின் விசாரணையில், மாணவ, மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பது தெரியவரும். அந்தக் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டிப்பதே சைலன்ஸ்டு படம்.
இந்தக் கதைதான் 'மாஸ்டர்' என்ற பெயரில், விஜய் நடிப்பில் உருவாகி வருவதாகவும், இதற்காகவே பூந்தமல்லியில் உள்ள மாற்றுத் திறனாளி பள்ளியில் சூட்டிங் நடந்தப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதியின்றி, வேலை நாட்களில் சூட்டிங் நடத்தியதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, பள்ளி நிர்வாகம் கூறிய புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் பாலியல் சீண்டல் மற்றும் துன்புறுத்தலை கருவாக கொண்ட படம் என்பதால் அங்கு சூட்டிங் நடத்தப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்காக சிறையிலும் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.
மாஸ்டர் படம் தொடர்பாக இணையதளத்தில் பரவும் விமர்சனங்களுக்கு, இதுவரை படக்குழுவினர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.