கூட்ட நெரிசலில் கைவரிசை காட்டிய இளம் பெண் - கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்
பட்டுக்கோட்டை அருகே கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் ஒன்பது பவுன் தாலிச் செயினை பறித்த பெண் ஒருவரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் மற்றும் போலீசார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண துவரங்குறிச்சி மட்டுமல்லாமல் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தாமரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தன வள்ளியம்மை என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயினை அங்கு நின்ற ஒரு பெண் அறுத்து எடுத்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் போலீஸார்கள் கையும் களவுமாக அந்த பெண்ணை பிடித்து அந்தப் பெண்ணிடம் இருந்த தாலி செயினை பிடுங்கி அதே இடத்தில் தன வள்ளியம்மையிடம் கொடுத்தனர் .தொடர்ந்து தாலி செயினை திருடிய அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் வெள்ளையம்மாள் வயது 35 என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து வெள்ளையம்மாளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து வெள்ளையம்மாளிடம் வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.