வியாபாரிகள் திடீர் சாலை மறியல் | கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு | மக்கள் அவதி

Update: 2025-07-17 11:33 GMT

பூ மார்க்கெட்டில் கடை வாடகை அதிகம் - வியாபாரிகள் சாலை மறியல்

சேலம் மாவட்டத்தில் பூ மார்க்கெட்டில் கடை வாடகை அதிகளவில் வசூலிப்பதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வஉசி பூ மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், மாத வாடகை அதிகமாக வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, பூ வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள், மாநகராட்சி நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், வியாபாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலம் அக்ரஹாரம் கடைவீதிகள் பகுதி அதிக கூட்டநெரிசல் நிறைந்த பகுதி என்பதால் இந்த திடீர் போராட்டத்தால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், முன்பு ஷட்டர் உள்ள கடைகளுக்கு 200 ரூபாயும், திட்டு கடைகளுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஷட்டர் உள்ள கடைகளுக்கு 20 ஆயிரமும், திட்டுக்கடைகளுக்கு 15 ஆயிரமும் மாநகராட்சி நிர்ணயித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய முறைப்படி வாடகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்