நவம்பர் மழை முடித்த இடத்தில் இருந்தே ஆரம்பித்த டிசம்பர்.. கரையை நெருங்கும் முன்னே திணறடிக்கும் மழை
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே நகர்ந்து வரும் நிலையில், நாகையில் கனமழை பெய்து வருகிறது... நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 3வது முறையாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடைமடை பகுதியில் கனமழை காரணமாக சம்பா பயிர்கள் செழிப்பாக காட்சியளிக்கின்றன...
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது... சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் அதேபோல எடமணல், திருமுல்லைவாசல், பழையார், கூழையார், பூம்புகார் உள்ளிட்ட கடலோர கிராமங்களிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாமலை நகர், சிவபுரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், சாமியார்பேட்டை, முட்லூர், அன்னங்கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது... விடுமுறை விடப்படாததால் மாணவர்கள் நனைந்து கொண்டே பள்ளி கல்லூரிகளுக்கு சென்றனர்... தொழிலாளர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் கடலூரின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது...