சேலம் வாழப்பாடியில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா, 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். டிஎன்பிஎல் வரலாற்றில் நான்கு தொடர் அரை சதங்கள் அடித்த ஜெகதீசனுக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் துஷார் ரஹேஜா பெற்றுள்ளார்.