Theni Flood | சீறிப்பாயும் வெள்ளம்.. விடிய விடிய வெளுத்த மழை.. கிடுகிடுவென உயரும் வைகை அணை
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வைகை அணைக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இன்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 2,268 கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணிக்கு மினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 மணி நேரத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து தற்போது 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி எட்டியுள்ளது. இன்று பிற்பகல் அணையின் நீர்மட்டம் 66 அடி எட்டி விடும் என்பதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வரும் நாட்களில் அதிகமான மழை பெய்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரியாக ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.