திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்.பி.க்கள் உட்பட 181 பயணிகளுடன் டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திரக்கோளாறு காரணமாக, சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று 8.15 மணிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில், கே.சி.வேணுகோபால், கொடிக்குன்னில் சுரேஷ் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் உள்பட 181 பேர் பயணம் செய்தனர். விமானம், பெங்களூரைத் தாண்டிச் சென்றபோது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானியின் உடனடி நடவடிக்கையால், இரவு 11.20 மணிக்குச் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பழுது பார்க்கும் பணி முடியாததால், மாற்று விமானத்தில் 2 மணி நேரம் தாமதமாக பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, விமான போக்குவரத்து ஆணையகம், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.