திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே, 12ம் வகுப்பு மாணவரை முகத்தில் ஸ்ப்ரே அடித்து காரில் கடத்தி சென்று துன்புறுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். முத்தமிழ்நகர் பகுதியில் வசிக்கும் சரவணன் - புவனா தம்பதியரின் மகன் சந்தோஷ், முதல் நாள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது,காரில் வந்த முதியவர், முகவரி கேட்பதுபோல் பேசிவிட்டு திடீரென முகத்தில் ஸ்பிரே அடித்து மாணவரை காரில் கடத்தி சென்று குடோனில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. தன்னை அடித்து தாக்கியதாகவும், இடதுகை தோள்பட்டையில் தழும்புகள் உள்ளதாகவும் மாணவர் தெரிவித்துள்ளார். மேலும், மயக்கநிலையில் இருந்த தன்னை, ஆடு மேய்த்தவர்கள் சிலர் மீட்டு தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகவும் சிறுவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.