சென்னையில், இளம்பெண்ணின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய ஜிம் பயிற்சியாளரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இளம்பெண்ணுடன் நட்புடன் பழகி வந்த, ஜிம் பயிற்சியாளர் ராஜ்குமார், சுமார் 1.10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்துள்ளார். மேலும், அவரை காதலிக்கும்படி வற்புறுத்தி, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண், அசோக் நகர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.