ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு வருடந்தோறும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றி பார்த்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து காணப்பட்டனர். இந்நிலையில் பருவமழையை தொடர்ந்து ஏற்காட்டில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வியாபார மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள காட்சி முனைகள் மற்றும் பூங்காக்களை சுற்றி பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் தவிர்க்க முடியாத முக்கிய இடமான ஏற்காடு படகு இல்லத்தில் தொடர் மழை காரணமாக படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்காடு படகு இல்லத்துக்கு படகு சவாரி செய்ய ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எப்பொழுதும் சுற்றுலா பயணிகள் ஆரவாரத்துடன் படகு சவாரி செய்யும் ஏற்காடு படகு இல்ல ஏரி படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது.