ரீல்ஸ் எடுத்த இளைஞர் ரயில் மோதி விழுந்த காட்சி- போலீசார் விளக்கம்

Update: 2026-01-23 05:23 GMT

ரீல்ஸ் எடுக்கும் போது ரயில் மோதி இளைஞர் கீழே விழும் வீடியோ காட்சிகள், ஏ.ஐ மூலமாக உருவாக்கப்பட்டது என ரயில்வே போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி வரும் நிலையில், ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வீடியோவை பதிவிட்ட நபர் குறித்தும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய விசாரணையில் ஏ.ஐ மூலமாக உருவாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஏ.ஐ மூலமாக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிஜத்தை போலவே ஏ ஐ மூலம் வீடியோ பதிவிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளைஞர் ரயில் முன் ரீல்ஸ் வீடியோ எடுப்பது போன்றும், அப்போது ரயில் இடித்து இளைஞர் கீழே விழுவது போன்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை டேக் செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு சிலர் புகார் அளித்துள்ள நிலையில், எங்கே நடந்தது இந்த வீடியோ என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏ.ஐ மூலமாக எடுக்கப்பட்ட வீடியோ என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, ரயில் மோதினால் அந்த இளைஞர் உடல் சிதறி உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த வீடியோவை பதிவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று ஏ.ஐ மூலமாக உருவாக்கப்பட்டு பரப்பும் வீடியோ ஏ.ஐ என குறிப்பிட்டு பரப்ப வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது போல ஏ.ஐ மூலம் வீடியோ உருவாக்கி வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்