நாதக பெண் நிர்வாகியிடம் டிஜிட்டல் மோசடி முயற்சி
நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகியின் மகனை கடத்தியதாக கூறி டிஜிட்டல் மோசடியில் ஈடுபட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் கிளோரி ஆனி. இவர் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணியில் நிர்வாகியதாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், போராட்டம் ஒன்றிற்கு கிளம்பிச் சென்ற நிலையில், அவரை மர்மநபர்கள் சிலர் வாட்சப் காலில் தொடர்பு கொண்டுள்ளனர். தங்களை சிபிஐ போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்ட மர்மநபர்கள், அவரது மகன் பிரேமை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், முதல் தகவல் அறிக்கை பதியும் முன், 50 ஆயிரம் பணத்தை ஜீபே நம்பரில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த கிளோரி ஆனி உடனே போராட்டத்தில் பாதுகாப்பில் ஈடுட்டிருந்த போலீசாரை உதவி கோரியுள்ளார். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில். கிளோரி ஆனியின் மகன் கடத்தப்படவில்லை என்பதும், அவர் பாதுகாப்பாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, வடமாநில மர்மநபர்கள் பணம்பறிக்க முயற்சித்தது தெரியவந்த நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.