Mayonnaise உயிரையே பறிக்கும் வீரியம்... குழந்தைகளுக்கு பேரபாயம் - மயோனைஸ் பிரியர்களே அதிர்ச்சி தகவல்
முட்டையில் இருந்து செய்யப்படும் மயோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? மயோனைஸ் அந்தளவுக்கு ஆபத்தானதா? உணவுப் பிரியர்களே, உங்கள் கவனத்திற்கு..!
முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் ஆகியவை கலந்த மயோனைஸ் அதன் வழவழப்புத்தன்மை மற்றும் ஒருவித சுவையால், சான்ட்விச், சாலட் என்று அனைத்திற்கும் அசத்தலான காம்பினேஷனாக இருக்கிறது. குறிப்பாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகளுக்கான கடைகள் பெருகிவிட்டதால், இந்த உணவு வகைகளுக்கு முக்கியமான ஸைடிஷ்களில் ஒன்றாக இருக்கிறது மையோனைஸ்.
குழந்தைகள் பெரும்பாலும் பிரெட், சப்பாத்தி என எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் வைத்து சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். எனவே, பெற்றோர் பலரும் கடைகளில் வாங்கும் மயோனைஸ்-க்கு பதிலாக வீட்டிலேயே தயாரித்து வைத்து பயன்படுத்துகின்றனர். அந்தளவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயோனைஸ் மீதான மோகம் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், மயோனைஸ் தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்தப்படுவதால், கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது பகீர் கிளப்பியுள்ளது. முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது, முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்ல இதற்கு முன்பாக கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் மையோனைஸ்-க்கு தடை விதித்திருக்கின்றன. பொதுவாக மயோனைஸில் 70 முதல் 80 சதவிகிதம் தண்ணீரும், முட்டையின் வெள்ளைக் கருவும்தான் பிரதானமாக உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மயோனைஸில் 90 கலோரி உள்ளது. மயோனைஸில் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பொருள்களை வைத்துப் பார்த்தாலே அதில் அதிக அளவு கொழுப்பும், அதிக கலோரிகளும் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒருவேளை உங்கள் குழந்தை ஏற்கெனவே உடல் பருமன் பிரச்னையோடு இருந்தால், நீங்கள் தினமும் அல்லது அடிக்கடி மயோனைஸ் கொடுப்பது உடல் பருமன் பிரச்சினையை உண்டாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மயோனைசில் நிறைவுற்ற கொழுப்புகள், பதப்படுத்திகள் உள்ளது. அதிகப்படியாக மயோனைஸ் உண்பது எடை அதிகரிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்கிறார்கள். வீட்டிலேயே செய்யக்கூடிய மயோனைஸ் கூட முறையாக தயாரிக்கப்படாமல் இருந்தால் அதில் சால்மொனெல்லா பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். அதேபோல், அதிகபட்சம் 4 நாட்கள்தான் அதன் ஆயுட்காலம். நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆபத்தில் முடியலாம் என்கின்றனர்.
வணிக ரீதியில் தயாரிக்கப்படும் மயோனைஸ் 6 மாதகாலம் வரையில் சேமித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதில் 65% எண்ணெய் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. சால்மொனல்லா பாக்டீரியாவில் சுமார் 2500 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மயோனைஸால் ஏற்படும் ஃபுட் பாய்சன் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தி, உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தும் வீரியம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
விற்பனையை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசும் தடை செய்திருக்கிறது. எனவே, இனி மயோனைஸ் கேட்டு குழந்தை அடம்பிடித்தால், கொண்டைக்கடலையை வைத்துச் செய்யப்படும் ஹம்மஸ் என்ற உணவு வகை அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கை கிரீக் யோகர்ட் உடன் மிக்ஸ் செய்தும் டிப் போல செய்துகொடுக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கெனவே, வீட்டில் வாங்கி வைத்திருக்கும் மயோனைஸ்-ஐ என்ன செய்யலாம் என்று நினைப்பவர்கள், கன்டிஷனருக்கு பதிலாக தலைக்கு பயன்படுத்தி குளிப்பது பலன் தருமாம். முயற்சித்துப் பாருங்கள்.