சென்னையில் நடைபெற்ற பால்புதுமையினர் சுயமரியாதை பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்த பேரணியில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பால்புதுமையினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வானவில் நண்பர்கள் என்ற பதம் தவறானது என வலியுறுத்தியுள்ள பால்புதுமையினர், தங்களுக்கு சம உரிமையும், கல்வியும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தங்களுக்கும் மற்றவர்கள் போன்றே உணர்வுகள் பொதுவானது என தெரிவித்த அவர்கள், பொது மக்கள் தங்களை பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.