கருப்பாக மாறிய வயல்வெளிகள்.. விஷமாக மாறிய விளைநிலங்கள் - பாத்தா ரத்தக்கண்ணீரே வருதே..
பச்சை நிற பசுமையான வயல்வெளியில் கருப்பு நிறத்தில் வழிந்தோடிய தண்ணீரைக் கண்ட விவசாயிகள் அடைந்த வேதனை சொல்லிமாளாது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆலை கழிவு நீரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்துள்ள கோபாலபுரம் கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த ஆலையைச் சுற்றி ஏராளமான விவசாய விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை நம்பி பல விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தற்போது ஆலையில் அரவை பணிகள் நடந்து வரும் நிலையில் அவற்றின் கழிவு நீர், குழாய் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆலையின் கிழக்குப் பகுதியில் கழிவு நீர் முறையாக வெளியேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக கழிவு நீர் ஆலையை சுற்றியுள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களிலும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் 20க்கும் மேற்பட்ட கிணறுகளிலும் கசிந்ததன் காரணமாக விவசாய நிலங்கள் அவற்றின் செழிப்பு தன்மையை இழந்து பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளிலிருந்து வரும் நீரும் துர்நாற்றத்துடன் கருப்பாக காணப்படுகிறது. இந்த நீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் போது நிலம், பயிர்கள், கால்நடைகள், மனிதர்கள் ஆகிய அனைவரும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரின் துர்நாற்றம் காரணமாக இந்த பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்கள் தங்களது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லக் கூடிய நிலைமையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக கூட்டுறவு ஆலை அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது, அவர்கள் எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை.
விவசாய நிலங்களை தங்களுக்கு உணவளிக்கும் தெய்வமாக கருதுவதால் அந்த நிலத்தில் விவசாயிகள் செருப்பு அணிந்து கூட நடப்பது கிடையாது. இவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக கருதும் நிலம், சர்க்கரை ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும் விவசாயிகளின் மனநிலை நினைத்து பார்க்க முடியாத வேதனையில் சுழல்கிறது.