ஓசூர் = மோசடியில் ஈடுபட்டு தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் பரபரப்பு
ஓசூரில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் தற்கொலைக்கு முயற்சி : பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை குவிந்ததால் பரபரப்பு
ஓசூர் பார்வதி நகர் காளேகுண்டா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாரூக் (35) இவர் வசந்த் நகர் பகுதியில் அலுவலகம் அமைத்து சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிதி நிறுவனம் நடத்துவதுடன் அதில் மாதாந்திர ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார். இவரிடம் தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு வியாபாரிகள், தினககூலிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஏலச்சீட்டில் பங்கேற்று பணம் கட்டியும் வந்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாரூக் பலருக்கும் ஏலச்சீட்டு பணம் வழங்காமல் ஏமாற்றி விட்டு திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறி இவர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஓசூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த பாரூக், திடீரென இன்று காலை பூச்சி மருந்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தார் அனுமதித்தனர்.
இது தொடர்பான தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாரூக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக ஓசூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் கூறும்பொழுது தாங்கள், பல ஆண்டுகளாக இவரிடம் நம்பிக்கையின் பேரில் ஏலச் சீட்டுக்காக பணம் கட்டி தங்களது வாழ்வாதாரத்திற்காக தொழிலுக்கு முதலீடு செய்து வந்துள்ளதாகவும்,
திடீரென இவர் ஏமாற்றிச் சென்றது அதிர்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இவர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான ஏலச்சீட்டு நடத்தி சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். எனவே, பணத்தை திருப்பி தருவதற்கு மனம் இல்லாமல் இவர் தற்போது தற்கொலைக்கு முயற்சி செய்து நாடகமாடுகிறார் என குற்றம் சாட்டும் பாதிக்கப்பட்டவர்கள், இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தாங்கள் செலுத்திய ஏல சீட்டு பணத்தை திருப்பி பெறுவதற்கான நடவடிக்கைகளை போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
