Govt Job Scam | சுதந்திரமாக சுற்றி திரியும் மோசடி செய்த அரசு ஊழியர் - சிறையில் பணத்தை இழந்த நபர்கள்

Update: 2025-06-23 04:31 GMT

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த அரசு ஊழியர் கடத்தல் - 5 பேர் கைது

திண்டுகல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியரை கடத்திய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர் சுதந்திரமாக வெளியே சுற்றி திரியும் நிலையில் பணத்தை இழந்தவர்கள் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருபவர் முருகன்.

இவர் மதுரையை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சரணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த குமார் தனது உறவினர்கள், பாண்டி , செல்வராஜ், ராஜா, சதீஷ், வீர சுந்தர் ஆகியோர் உதவியுடன் சேர்ந்து, பணி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த முருகனிடம் பேச்சு கொடுத்து மதுரை பொதும்பு பகுதிக்கு காரில் கடத்தி சென்றுள்ளார்.

இந்த நிலையில் கணவரை 2 நாட்களாக காணவில்லை என முருகனின் மனைவி அளித்த புகாரில், சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செல்போன் டவர் மூலம் ஆய்வுசெய்த போது மதுரை பொதும்பு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முருகனை மீட்டு, குமாரின் உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமார் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கடத்தப்பட்ட அரசு ஊழியர் முருகன் கடந்த ஜனவரி மாதம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சந்திரன் என்பவரிடம் அவரது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு இதே சாணார்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்