- சேலத்தில் தவணை தொகை கேட்டு, தனியார் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உயிரிழந்தவர், வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வடிவேல்... தனியார் வங்கியில் கடன் பெற்ற, இவரிடம் வங்கி (Equitas Bank) ஊழியர்கள் தவணை தொகை கட்ட தாமதமானதாக கூறி, கால்நடைக்கு தீவனம் அறுக்கக் கூடப் போகவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டியதாக தெரியவருகிறது.
- 4 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலத்தை பிணையாக வைத்து தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்றிருந்த விவசாயி வடிவேல், ஏப்ரல் மாதத்திற்கான தவணை தொகை ரூ.12,300-யை மட்டும் நிலுவை வைத்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், கடந்த 2 நாட்களாகவே தனியார் வங்கி ஊழியர்கள் வடிவேலுவிடம் மாத தவணை கேட்டு நெருக்கடி தந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், தவணை தொகையை தந்தால் மட்டுமே வீட்டை விட்டுப் போவோம் என நிர்பந்தம் செய்து, ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதால், மனமுடைந்த விவசாயி வடிவேல் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார்.
- இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் தனியார் வங்கி ஊழியர்கள் இடம் விசாரணை செய்து வருகின்றனர்.
- கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.