இளம்பெண்ணை காரில் கடத்திய இளைஞர் - இறுதியில் ஷாக் கொடுத்த ஜோடி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் காரில் கடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் அந்த பெண் தனது தந்தையுடன் சாலையில் நடந்து சென்றபோது, திடீரென காரில் வந்த இளைஞர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார். அந்த பெண்ணின் தந்தை கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் பண்ணாரி சோதனை சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு, மற்றொரு வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர். கடத்திச் சென்றவர்கள், பதற்றத்துடன் காரை ஓட்டிச் சென்றதால், கார் பள்ளத்தில் இறங்கி பழுதாகி நின்றது. இதையடுத்து, காரில் இருந்த 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பெண்ணை கடத்திச் சென்றவர், அவருடைய காதலர் ராஜு என்பதும், பெண் கொடுத்த தகவலின்பேரிலேயே அவரை அழைத்துச் செல்ல, ராஜு வந்ததும் தெரியவந்தது. காரிலேயே அந்த பெண்ணுக்கு ராஜு தாலி கட்டியது தெரிய வந்ததால் போலீசாரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த பெண்ணின் விருப்பத்தின்பேரில், அவரை ராஜுவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.