செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் வார்டு உறுப்பினர் மீது ஆதராமற்ற முறையில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாரதபுரம் பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அவ்வூராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், தனது வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமல்ராஜிற்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விமல்ராஜ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இணைந்து, விமல்ராஜின் மீதான வன்கொடுமை வழக்கை விலக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள புகார்தாரர் ராமலிங்கம், தன்னை சமூகரீதியாக தாழ்த்திப் பேசி, தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.