விபத்தில் சிக்கிய கேரள புதுமண தம்பதி - கணவன் மரணம்
திருச்சி அருகே, கேரள புதுமணத் தம்பதி வந்த கார், விபத்தில் சிக்கியதில், கணவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் இடுக்கி வரையாற்றுமண்டி எல்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் டொனாட். இவரும் இவரது மனைவி அமுல்யாவும் காரில் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு திரும்பி உள்ளனர். காரானது துவாக்குடி அருகே உள்ள திருச்சி அரை வட்ட சாலையில் வந்த போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே டொனாட் பரிதாபமாக உயிரிழந்தார். அமுல்யா பலத்த காயமடைந்த நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி மீட்டனர். விபத்து குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.