ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாடகை காரில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த ரகசிய தகவலின் படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் நடத்திய சோதனையின்போது, இந்த 4 பேரும் பிடிபட்டனர். விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவர் திருப்பதி செல்வதாக OLA காரை புக் பண்ணி சென்றுள்ளார். அங்கு, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் போதை மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திருப்பதிக்கு ரயிலில் வந்த, 17 வயது சிறுவன், தினகரன், சக்திவேல் ஆகியோர் ஏற்கனவே காத்திருந்தனர். பிறகு, வாடகை காரில் 3 பேரையும் ஏற்றிக் கொண்டு திரும்பி வந்தபோது, போலீசில் சிக்கியுள்ளனர். இதில், போலீஸ்க்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கமல் தனது உறவினரின் 7 வயது குழந்தையையும் உடன் அழைத்துச் சென்றது, குறிப்பிடத்தக்கது.