திடீர் ரெய்டு... கார் ஷெட்டில் ஆவணங்களா? தேடிய அதிகாரிகள் - அதிமுகவில் பரபரப்பு
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 வரை சேவூர் ராமசந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2021ம் ஆண்டு முதல் ஆரணி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், சேவூர் ராமசந்திரன், அவரது மகன்கள் சந்தோஷ், விஜயகுமார் ஆகிய வீடுகளில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஓழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டின் கார் ஷெட்டில் காரை திறந்து ஆவணங்கள் உள்ளதா? என்றும் தேடினர்.
அமைச்சராக இருந்தபோது சேவூர் ராமச்சந்திரன், 200 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.இவர், அதிமுக ஒன்றிய செயலாளராக உள்ள நிலையில், எம்எல்ஏ-வாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக
வகுரணியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. முன்னாள் எம்எல்ஏ நீதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய சூழலில், வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர்.