அரசு முறைப் பயணமாக நமீபியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருதை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, நமீபியா அரசுக்கும் அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வாவுக்கும் (Netumbo Nandi-Ndaitwah) நன்றி தெரிவித்தார். இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் சார்பில் பெற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து நமீபியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவும், நமீபியாவும் சுதந்திர போராட்ட காலத்தில் இருந்தே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகின்றன என்று தெரிவித்தார். நமது நட்பு, அரசியலால் உருவானது அல்ல என்றும், மாறாக போராட்டம், ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றால் விளைந்தது என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்திலும் இந்தியாவும் நமீபியாவும் வளர்ச்சிப் பாதையில் இணைந்தே செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.