உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி அரசாங்கங்களை குறைத்து மதிப்பிடவும், வலதுசாரி கதைகளை பொது விவாதத்தில் புகுத்தவும், ஆளுநர்கள், குடியரசு துணைத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் என்ற அரசியலமைப்பு அலுவலகங்களை, அரசியல் மயமாக்குகிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார். ஜனநாயகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசாங்கங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பிரதாயபூர்வமாக நியமிக்கப்படுபவர்களால் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு மேலே இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இதையே உச்ச நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று தீர்ப்பு, ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.