மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இரு தரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இந்த நிலையில், இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்
இந்தியாவுக்கும், மங்கோலியாவுக்கும் இடையிலான ஆன்மீக ரீதியிலான உறவு இருப்பதாகவும், பல நூற்றாண்டுகளாக, இரு நாடுகளும் புத்த மதம் என்ற நூலால் பிணைக்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு புத்தரின் இரண்டு சிறந்த சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரின் புனித நினைவுச்சின்னங்களை மங்கோலியாவிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
மங்கோலியாவில் உள்ள கந்தன் மடாலயத்திற்கு ஒரு சமஸ்கிருத ஆசிரியரை அனுப்பி, அங்குள்ள புத்த மத நூல்களை ஆழமாகப் படித்து, பண்டைய அறிவு மரபை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மங்கோலிய குடிமக்களுக்கு இலவச இ-விசாக்களை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளதாக கூறிய பிரதமர்,
இந்தியாவின் 1.7 பில்லியன் டாலர் கடனுடன் கட்டமைக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், மங்கோலியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு புதிய ஊக்கத்தை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா, இந்த ஆண்டு இறுதியில் இருந்து அமிர்தசரஸ் மற்றும் புது தில்லிக்கு, மங்கோலிய விமான நிறுவனம் ஒன்று சார்ட்டர் விமானங்களை இயக்கத் தயாராகி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.