இந்திய பொருளாதார வளர்ச்சியில் வங்கி துறை முக்கிய பங்கு வகிப்பதாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது நமது வங்கித் துறையின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் வங்கிகள் தீவிர பங்காளிகளாக மாற முடியும் என தெரிவித்துள்ள அவர், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வங்கி துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். அதோடு, வங்கிகள் செல்வத்தின் பாதுகாவலர்கள் மட்டுமல்ல... நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அவை மலிவு விலையில் பல்வேறு நிதி சேவைகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் வளர்ச்சிக்கான முயற்சிகளில் தனியார் வங்கிகள் மிக முக்கிய பங்களிப்புடன் இருப்பதாகக் கூறினார்.