"சிறையில் இருந்தும் பதவியில் தொடர்ந்தால் ஊழலை ஒழிக்க முடியுமா?" - பிரதமர் கேள்வி
சிறையில் இருந்தும் பதவியில் இருக்கும் அணுகுமுறை தொடர்ந்தால் ஊழலை எதிர்த்து எப்படி போராட முடியும்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். பீகார் மாநிலம், கயாவில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பின், பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால், அவர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதா குறித்து பேசினார்.
ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தானாகவே வேலையை இழக்கிறார் என்று தெரிவித்த பிரதமர் மோடி,
ஆனால், பிரதமர், முதல்வர், அமைச்சர் ஆகியோர் சிறையில் இருந்தும் அரசு பதவியை அனுபவிக்க முடியும் என்ற நிலை இருப்பதாக கூறினார்.
இத்தகைய அணுகுமுறை தொடர்ந்தால், ஊழலை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, அதனால்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, முதல்வரோ, அல்லது அமைச்சரோ, பிரதமரோ கைது செய்யப்பட்டால், அவர்கள் 30 நாட்களுக்குள் ஜாமின் பெற வேண்டும் என்றும்,
ஜாமின் கிடைக்கவில்லை எனில், 31-வது நாளில் அவர்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.