"பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைவோம்..." - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு | Mamata Banerjee

Update: 2023-04-24 14:04 GMT

பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என எதிர்க்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்கும் பணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசிய நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அவருடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் மம்தாவை சந்தித்தார். பின்னர் மூவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். மம்தா பானர்ஜி பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஈகோவை விடுத்து, பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார்.

ஜெயபிரகாஷ் நாராயணனின் பயணம் தொடங்கிய பீகாரிலே இதற்கான அனைத்து கட்சி கூட்டமும் நடக்கட்டும் என நிதிஷ் குமாரிடம் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே காங்கிரசிடமிருந்து விலகியிருந்த மம்தா காங்கிரஸ் விரும்பினால் கூட்டணிக்கு தயார் என கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது முடிவு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதேபோல் காங்கிரசுடன் கூட்டணி இல்லை எனக் கூறியிருந்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவையும் சம்மதிக்க செய்யும் பணியில் நிதிஷ் குமார் இறங்கியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்