ஆட்சியர் அலுவலகம் கட்ட இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-19 13:04 GMT
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி
மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கை விசாரித்த  உயர் நீதிமன்றம், உரிய அனுமதிகளையும், ஒப்புதலையும் பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டது.

ஆனால், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி, தமிழக அரசுக்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு  மீதான விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான  கட்டுமான பணிகள் நடைபெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஒப்பந்ததாரர் தரப்பில், சுற்றுச்சூழல்,மற்றும், நகரமைப்பு திட்ட இயக்குனர் அனுமதி பெற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருப்பதால் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டலாமா? கூடாதா  என முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளதாக கூறிய நீதிபதிகள், 

ஆட்சியர் அலுவலகம் கட்டுவற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்