நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ
நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்;
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க, எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒரு நபர் விஜய் சேதுபதி மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசி, ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரின் ஐபி அட்ரஸ் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். இதில், ஐபி முகவரி இலங்கையிலுள்ளது என தெரியவந்தது. இதையடுத்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் அந்த நபரை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி மகள் குறித்து கருத்து பரப்பியது தான் என ஒருவர் பேட்டி அளித்து, வேலை இன்மை காரணமாகவும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாலும் இவ்வாறு செய்து விட்டதாக கூறி, மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில், வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பும் போது, வீடியோ தொடர்பான அறிக்கையயையும் அனுப்ப முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.