ஊரடங்கில் களைகட்டும் கஞ்சா விற்பனை - ஆன்லைனில் கஞ்சா விற்பனை கனஜோர்...

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், ஆன்லைனில் கஞ்சா விற்பனையும் கன ஜோராக நடைபெற்று வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், கஞ்சா கும்பல் பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது...

Update: 2020-08-01 03:03 GMT
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்க களம் இறங்கிய போது தான் அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கஞ்சா விற்பனையை காலத்திற்கு ஏற்றார்போல ஹைடெக்காக மாற்றி ஒரு கும்பல் விற்பனை செய்வது தெரியவந்தது. இதற்கென ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி, போன் செய்தால் போதும், கஞ்சா உங்கள் வீடு தேடி வரும் என கூறி ரகசியமாக தங்கள் விற்பனையை கனஜோராக நடத்தி வந்தது அந்த கும்பல்....  5 நிமிடத்தில் கஞ்சா டோர் டெலிவரி என்ற அளவுக்கு சுறுசுறுப்பாக வேலையை பார்த்துள்ளனர் மதுரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர். டோர் டெலிவரி செய்வதற்காக சென்ற 21 வயதான சிவனேஸ்வரன் என்ற இளைஞரை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது தான் இந்த சம்பவம் அனைத்துமே அம்பலமானது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது இதில் ஒரு கும்பல் ஈடுபட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சாட்சாத் இதே மாதிரியான சம்பவம் ஒன்று அடுத்து கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சிவனேஸ்வரனிடம் கஞ்சா எங்கு இருந்து வாங்கபட்டது என்பது குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.கோவை மாநகர் பகுதிகளிலும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வரவே, அவர்களும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அப்போது தங்களுக்கு செல்போனில் ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர்களிடம் கொடுப்பதற்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சாவை பலரும் கொண்டு சென்றது தெரியவந்தது. 
இதையடுத்து கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது ஒரு புறம் என்றால் சென்னையில் சட்டவிரோதமாக மாவா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றையும் பீகாரை சேர்ந்த இளைஞர்கள் நடத்தி வந்தது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் போதைப் பொருளான மாவாவை தயாரித்து அதை கிலோ கணக்கில் பதுக்கிவைத்திருப்பதை கண்டறிந்த போலீசார், பீகார் இளைஞர்கள் 4 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் இதுபோல் ஆங்காங்கே கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பது போலீசார் மத்தியில் பல்வேறு கேள்விகளை உருவாக்கி உள்ளது. எங்கிருந்து கஞ்சா விற்பனைக்கு வருகிறது? இந்த கும்பலை இயக்குவது யார்? எனவும் அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்