ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின் தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-05-09 11:34 GMT
மதுரையில் கடந்த 7 ஆம் தேதி இரவு மின்தடை ஏற்பட்ட போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் செயற்கை சுவாசம் பெற்று வந்த 5 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு அவசிய உபகரணங்களை கையிருப்பு வைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கக்கோரி மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த குரு சங்கர் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த இரு  வழக்குகளையும்  விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், தண்டபாணி அடங்கிய அமர்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின் தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான உபகரணங்களை போதுமான அளவு வைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைப்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  29 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்