உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து தொடர் - பிரான்ஸ், குரோஷியா அணிகள் வெற்றி; டென்மார்க் - ஆஸ்திரேலியா போட்டி டிரா...

Update: 2018-06-22 02:37 GMT
உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா


ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை, குரோஷியா அணி சந்தித்தது. குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இடையிலான  போட்டியில் குரோஷியா, 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. குரோஷியாவின் ஆண்ட் ரெபிக், ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, அந்த அணியின் லூகா மோட்ரிக், 80வது நிமிடத்திலும், இவான் ராக்கிடிக் 91வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து, அந்த அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணி, கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறியது ரசிகர்களை கவலை அடையச் செய்தது.

உலக கோப்பை கால்பந்து தொடர் - பெரு அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி




உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற  போட்டியில் பெரு அணியுடன், பிரான்ஸ் அணி மோதியது.   போட்டியின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கெலியான் எம்பாப்பே கோல் அடித்தார். இதன் மூலம் 19 வயதான எம்பாப்பே , உலக கோப்பை தொடரில் கோல் அடித்த இளம் பிரான்ஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 2-வது முறையாக தோல்வியை தழுவிய பெரு அணி, தொடரிலிருந்து வெளியேறியது.

உலக கோப்பை கால்பந்து தொடர் : டென்மார்க்-ஆஸ்திரேலியா போட்டி டிரா



உலக கோப்பை கால்பந்து தொடர் லீக் ஆட்டத்தில் டென்மார்க் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில், 7ஆவது நிமிடத்தில் டென்மார்க் வீரர் எரிக்சன் ஒரு கோலும், 38ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெடினாக் ஒரு கோலும் அடித்தனர். பின்னர் இறுதிவரை இரு அணிகளுக்கும் கோல் எதுவும் அடிக்காததால்,  1க்கு 1 என்ற கணக்கில் ஆட்டம் டிரா ஆனது.
Tags:    

மேலும் செய்திகள்