அப்பா எனக்கு நீ கொள்ளி வைக்காதே - மாணவர் தினேஷ் உருக்கமான தற்கொலை கடிதம்

நெல்லையில் மதுபோதைக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாமல் மாணவன் ஒருவன் ரயில்வே மேம்பாலத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-05-02 08:01 GMT
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்த மாடசாமி குடிபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் குடும்பத்தில் தகராறு நீடித்து வந்த நிலையில், அவரை திருத்த பலமுறை மேற்கொண்ட முயற்சி தோற்றுப் போனதாக தெரிகிறது. 
12ஆம் வகுப்பு முடித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வரும் அவரது மகன் தினேஷ் நேற்றும் தந்தை குடித்துவிட்டு வந்த நிலையில் அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் இன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தூக்கில் ஒரு சடலம் தொங்குவதாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கீழே இறக்கிப் பார்த்ததில், உயிரிழந்தவர் மாணவர் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரது சட்டையில் இருந்த கடிதம் மற்றும் நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தன் மரணத்துக்கு பின்னராவது குடிப்பதை நிறுத்த வேண்டும் என தந்தை மாடசாமிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ள தினேஷ், தனது இறுதிச் சடங்கை தந்தை செய்யக் கூடாது என கடிதத்தில் தெரிவித்துள்ளார். தனது மரணத்துக்கு பின்னராவது பிரதமர், முதலமைச்சர் மதுக்கடைகளை மூடுவார்களா என்றும், இல்லையென்றால் ஆவியாக வந்து மதுபான கடைகளை அடித்து உடைக்க போவதாகவும் கடிதத்தில் தினேஷ் எழுதியுள்ளார். தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவன் உயிரை மாய்த்த சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்