ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த போது அதிரடிகளுக்கு பெயர் போனவர் கிரண்பேடி

தண்ணீர் பிரச்சினை தொடர்பான கிரண்பேடியின் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.அதிரடிக்கு பெயர் போன கிரண்பேடி பற்ற வைத்த பரபரப்பை விவரிக்கிறது இந்த தொகுப்பு

Update: 2019-07-02 12:33 GMT
புதுச்சேரியின் ஆளுநராக பதவியேற்பதற்கு முன்பாகவே அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். பதவி ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக அதிகாரிகளை அழைத்து எப்படி கூட்டம் நடத்தலாம் என்ற சர்ச்சை வெடித்தது.ஆளுநராக புதுச்சேரிக்கு வந்தது முதலே முதலமைச்சர் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே மல்லுக்கட்டு யுத்தம் தான்.ஹெல்மெட் கட்டாயம் என்பதை அதிரடியாக அறிவித்து தானே களத்தில் இறங்கி சோதனை நடத்தினார் கிரண்பேடி. ஆனால் ஹெல்மெட் சட்டத்தை படிப்படியாக கொண்டு வர வேண்டும் என அரசு கூறியதை அவர் ஏற்கவில்லை.இதேபோல் பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் தங்களுக்கு வந்த உத்தரவை சபாநாயகரிடம் கொடுத்த நிலையில், அன்றைய தினம் இரவே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் ஆளுநர் மாளிகையில் வைத்தே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடி. இது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.இதேபோல் அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி அமைச்சர்களையே அதிர வைத்தார்.அரசு விழாக்களில் கிரண்பேடி கலந்து கொள்ளும் போது அவருக்கு எதிராக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கோஷமிட்ட நிகழ்வுகளும் புதுச்சேரியில் அரங்கேறியது.அரசு கோப்புகளில் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பிவிடுகிறார் என்றும், இதனால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யமுடியவில்லை என கூறி முதலமைச்சர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நடத்தினார்.அப்போது முதலமைச்சர் போராட்டம் நடத்துவதை ஆளுநர் மாளிகையின் உள்ளே இருந்தபடி சைக்கிளில் பயணம் செய்து பார்வையிட்டார் கிரண்பேடி.அந்த சமயத்தில் காகம் புகைப்படத்தை பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தான் பதிவிட்டது முதலமைச்சரை குறித்து அல்ல என்று பின்னர் விளக்கம் அளித்தார்.தினமும் ட்விட்டரில் ஏதேனும் ஒரு கருத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் கிரண்பேடி. அதற்கு முதலமைச்சர் பதில் சொல்வதும், அதற்கு மீண்டும் ஆளுநர் பதிலடி கொடுப்பதும் என மாநில அரசியல் சூழலே எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.அதிகாரம் யார் கையில் உள்ளது என அரசு அதிகாரிகள் குழம்பித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவர்களின் இந்த அதிகார போட்டி மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் தான் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த கிரண்பேடியின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல், அனைத்து கட்சியினரும் கிரண்பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்