விளையாட்டு திருவிழா - 21.12.2018 : ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி
விளையாட்டு திருவிழா - 21.12.2018 : மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார்களுக்கான பந்தயம் FORMULA E கார் பந்தயம்..
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி :
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளிகளுக்கு இடையிலான டி 20 சாம்பியன்ஷிப் போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் இருந்து 64 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறிப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அம்பத்தி ராயுடு, MOHITH SHARMA, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அம்பத்தி ராயுடு, மாணவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு என்று தெரிவித்தார். இந்த தொடரில் ஜொலிக்கும் மாணவர்கள், வாசிங்டன் சுந்தர் போல் இந்திய அணிக்கு விளையாடுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் அம்பத்தி ராயுடு கூறினார்.
தொடர்ந்து 5வது ஆண்டாக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டிகளில், அரசுப் பள்ளி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை அணி நிர்வாகியான காசி விஸ்வநாதன் கூறினார். இந்த தொடரில் விளையாடிய வாசிங்டன் சுந்தர், ஷாரூக்கான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அடுத்தக்கட்டத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார்களுக்கான பந்தயம் :
மின்சாரத்தால் இயங்கக் கூடிய கார்களுக்கான பந்தயம் தான் FORMULA E கார் பந்தயம். புதிய சீசனுக்கான முதல் பந்தயம் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் GEN2 ரக கார் முதல் முறையாக அறிமுகமானது. இது மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. குறுகிய சாலைகள் கொண்ட ஒடுதளத்தில் கார்கள் இயக்கப்பட்டதால், வீரர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், சில கார்கள் விபத்தில் சிக்கின. 18வது லேப்களில் நடப்பு உலக சாம்பியன் VERGN, முதலிடத்தை நோக்கி சென்றார். ஆனால் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக அவருக்கு பெனால்டி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக போர்ச்சுகல் வீரர் ஆண்டானியோ டி கோஸ்டா முதலிடத்தை பிடித்தார். இந்த பந்தயத்தில் முன்னாள் பார்முலா ஓன் பந்தய வீரர் Felipe Massa பங்கேற்றார்.
கூடைப்பந்தை வைத்து கின்னஸ் சாதனை :
கூடைப்பந்தை வைத்து கின்னஸ் சாதனைகள் செய்வதையே பிழைப்பாக சில சாகச வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சாகச குழு, பந்தை தலையால் முட்டி, பந்தை கூடைக்குள் செலுத்தி அசத்தியது. கண்களை கட்டிக் கொண்டு ஒரு கையால் பந்தை கூடைக்குள் சரியாக போடும் சாதனையும் அரங்கேறியது
ஒரு நிமிடத்தில் அதிக பந்துகளை கூடைக்குள் சரியாக போடுவது, தூரத்திலிருந்து ஒரு கையில் கூடைக்கு சரியாக பந்தை செலுத்துவது என பல்வேறு சாதனைகளும் இந்த குழு படைத்தது. தரையில் உட்கார்ந்து கொண்டு கூடைக்குள் பந்தை சரியாக போடும் சாதனையையும் அசால்டாக மேற்கொண்டது இந்த சாகச குழு. இறுதியாக 533 அடி உயரத்திலிருந்து பந்தை சரியாக கூடைக்குள் போட்டு கின்னஸ் சாதனையை வெற்றிக்கரமாக இந்த குழு மேற்கொண்டது.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்:
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.. கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதிரடி வீரர்களாக கருதப்படும் சேவாக், கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு எல்லாம் பிதாமகன் ஸ்ரீகாந்த். நூறு பந்துகளுக்கு 33 ரன்கள் எடுத்த காலக் கட்டத்தில் 40 பந்துகளில் அரைசதம் விளாசியவர் ஸ்ரீகாந்த்
சென்னையில் 1959ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீகாந்த், தனது 21வது வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார். தனது அதிரடியால் எதிரணி வீரர்களை கதிகலங்க வைத்த ஸ்ரீகாந்த், 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றவர். டெஸ்ட்டில் 2 ஆயிரத்து 62 ரன்கள், ஒருநாள் போட்டியில் 4091 ரன்கள் விளாசியுள்ள ஸ்ரீகாந்த், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார்.
ஸ்ரீகாந்த் கேப்டனாக இருந்த போது தான், 16 வயதே நிரம்பி இருந்த சச்சின் டெண்டுல்கரை அணியில் சேர்த்து விளையாட வைத்தார். ஆம். சச்சினின் முதல் கேப்டன் ஸ்ரீகாந்த் தான். ஒருநாள் போட்டியில் ரவி சாஸ்த்ரியுடன் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்தார் ஸ்ரீகாந்த். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்டால்.. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் 100 ரன் பார்ட்னர்ஷிப் வைத்தது ஸ்ரீகாந்த், ரவி சாஸ்த்ரி ஜோடி தான்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஸ்ரீகாந்த், கிரிக்கெட் வர்ணணையாளராக கலக்கி வந்தார். அதற்காகவே கிரிக்கெட் பார்த்த ரசிகர்களும் உண்டு. 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக ஸ்ரீகாந்த் பொறுப்பேற்றார். அன்று சச்சினுக்கு வாய்ப்பு வழங்கிய ஸ்ரீகாந்த், இம்முறை விராட் கோலிக்கு வாய்ப்பு வழங்கினார். இவர் தேர்வு செய்த அணி தான் உலகக் கோப்பையை வென்றது. அந்த காலக் கட்டத்தில் வட இந்தியர்களிடம் சென்னை என்று கூறினால், அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்த பெயர் ஸ்ரீகாந்த் தான்..
Next Story