இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் சிறை..? மாலத்தீவில் நடப்பது என்ன..?

இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதன் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை காணலாம்.
x
இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர மாலத்தீவு அரசு திட்டமிட்டுள்ள நிலையில்,  இதன் பின்னணியை விவரிக்கும் ஒரு தொகுப்பை காணலாம்...

இந்தியாவுடன் இனம் மற்றும் கலாசார ரீதியாக நீண்டகால நட்புறவை கொண்டது, இந்திய பெருங்கடல் தீவு தேசமான மாலத்தீவு... 

1988 ஆம் ஆண்டு ஆயுதக்குழுக்கள் மாலத்தீவை கைப்பற்றுவதை தடுத்த இந்தியா, 2008 ஆம் ஆண்டு அந்நாடு சர்வாதிகார ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாற உதவிகளை செய்தது.  

இவ்வாறு வலுவடைந்த இரு நாடுகள் இடையிலான உறவு, 2012 ஆம் ஆண்டு மாலத்தீவு முன்னேற்ற கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன் (Abdulla Yameen) அதிபரான போது விரிசலை எதிர்கொண்டது. 
 
சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட அப்துல்லா யாமீன் ஆட்சியில், மாலத்தீவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சீனா காலூன்ற தொடங்கியது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மாலத்தீவில் குழப்பத்திற்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த இப்ராகிம் முகமது சோலிஹ்  (Ibrahim Mohamed Solih) வெற்றி பெற்று அதிபரானார். 

தோல்வியை தழுவிய அப்துல்லா யாமீன், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். மீண்டும் இருநாடுகள் இடையிலான உறவு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், யாமீன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

இதனையடுத்து மாலத்தீவில் இந்தியாவே வெளியேறு என்ற இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

மாலத்தீவில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதாகவும், மாலத்தீவு கடலோர காவல்படை துறைமுகத்தை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அங்கு பிரசாரம் செய்யப்படுகிறது.

இந்த விவகாரத்தை இந்திய தூதரகம் மாலத்தீவு அரசிடம் கொண்டு சென்ற நிலையில், பிரசாரங்களுக்கு கவலை தெரிவித்த மாலத்தீவு அரசு, இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க திட்டமிட்டுள்ளது. 

அந்நாட்டின் ஆளும் கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி இதற்கான மசோதாவை தயார் செய்திருப்பதாகவும், இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்